காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகள் உள்ள நிலையில், புதிதாக மேகதாது எனும் பகுதியில் அணை கட்ட, முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது.
காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இந்த புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகாவால் தேக்கி வைக்க முடியும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் வசதிக்காகவே இது கட்டப்பட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
ஆனால், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதுகிறது. காவீர் நதிநீர் பங்கீட்டில், இரு மாநிலத்திற்கும் இடையே உள்ள பஞ்சாயத்து நாடறிந்தது. இதில், புதிதாக ஒரு அணையை கட்டினால் என்னவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க, மேகதாது அணையை கட்டியே தீருவது என தற்போதைய குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அதேசமயம், இதனை கட்டவிடக் கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது.
இந்தநிலையில், புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால், தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணலாம் என்றும், அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒரு தவறான புரிதலை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விரிவாக விளக்கத் தயாராக உள்ளதாகவும் அதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
'மேகதாது அணை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வுக்கு வர விரும்புகிறோம். இது குடிநீர் தேவைக்கான அணை. பருவமழை காலத்தில் கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு திறந்துவிடப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதைத் தேக்கி வைப்பதற்கான இந்தத் திட்டம் தமிழகத்துக்கு எதிரானது அல்ல.
ஆனால் இது தமிழக நலனுக்கு எதிரானது போன்ற தோற்றத்தை தமிழக மக்களிடையே பரவியுள்ளது. இதைப் பேச்சுவார்த்தை மூலம் தெளிவுபடுத்த நேரம் ஒதுக்கவேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.