மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுதலையான 13 பேருக்கு வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, 1996-ம் ஆண்டு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பஞ்சாயத்து தேர்தலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில், உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
அண்ணா நூற்றாண்டு விழா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 2019-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
அப்போதே, மேலவளவு கொலைவழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு கொலையானவர்கள் குடும்பத்தினர் மற்றும் தலித் அரசியல் அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆட்சேபனை தெரிவித்து உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலையானவர்களின் மனைவிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவில் மேலவளவு கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு வேறு வழக்கில் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை விடுதலை ஆன 13 பேருக்கும் வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"