Melavalavu Murugesan Murder Case Convicts Released: மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் படுகொலையில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து மதுரையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பலவேறு அமைப்புகள் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
மேலவளவு படுகொலை, அவ்வளவு சுலபத்தில் மறந்து விடுகிற கொடூரம் அல்ல! மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சியில், பஞ்சாயத்து தலைவர் பதவி, பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பட்டியல் வகுப்பினர் யாரும் போட்டியிட முடியாத அளவுக்கு மாற்று வகுப்பினரின் மிரட்டல்கள் இருந்தன.
இரு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, 3-வது முறையாக தேர்தல் நடைபெற்றபோது பட்டியல் வகுப்பைச் சேர்ந்த முருகேசன் தைரியமாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரை 1997 ஜூன் 30-ம் தேதி ஒரு கும்பல் துள்ளத் துடிக்க கொலை செய்தது. இந்தக் கொலை வழக்கில் சிறையில் இருந்த 14 பேரை, எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கடந்த 9-ம் தேதி அரசு விடுதலை செய்தது.
இதே மதுரையில் குடிநீர் திருட்டைத் தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி படுகொலையில் தண்டிக்கப்பட்ட திமுக பிரமுகர்களை 2008-ல் திமுக அரசு விடுதலை செய்தது. அப்போது திமுக.வை தவிர்த்தக் கட்சிகள் அந்த விடுதலையை கண்டித்தன. தற்போது மேலவளவு கொலையாளிகள் விடுதலையை மார்க்சிஸ்ட் மற்றும் குறிப்பிட்ட அமைப்புகளே இதுவரை கண்டித்து அறிக்கை விட்டிருக்கின்றன. பிரதான கட்சிகள் இதுவரை இந்த விவகாரத்தை கண்டு கொள்ளவில்லை.
இதற்கிடையே மேலவளவு கொலையாளிகள் விடுதலையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேற்படி விடுதலைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததுடன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க அரசுத் தரப்பைக் கேட்டிருக்கிறது. இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலவளவு கொலையாளிகள் விடுதலை குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு: ‘மதுரை மாவட்டம், மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் 1997ல் ஜூன் 30ந் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். சாதிய வெறியுடன் பட்டப்பகலில் நடத்தப்பட்ட கொடூரமான கொலையாகும் இது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 4 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போது நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதாக கூறி மீதமுள்ள 13 பேரும் கடந்த 9ந் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கொடூரமான சாதிவெறி அடிப்படையிலான படுகொலையில் தண்டிக்கப்பட்ட 13 பேரை தமிழக அரசு சர்வசாதாரணமாக விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவர்களது விடுதலையை ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.’ இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கை விடுத்திருக்கிறார்.
மேலவளவு கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நவம்பர் 22-ல் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்த அறிக்கை:
‘மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சி 1996 ல் தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தலித்துகள் எவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என மிரட்டப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து 9.10.1996 மற்றும் 28.12.96 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு 31.12.96 அன்று தேர்தல் நடைபெற்றது. அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முருகேசன் வெற்றி பெற்றார். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தார்.
இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பும்போது மேலவளவு படுகொலை நிகழ்த்தப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, பூபதி, சௌந்தரராஜன் ஆகியோர் சாதியவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் தலை துண்டிக்கப்பட்டு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் வீசி எறியப்பட்டது.
இவ்வழக்கின் குற்றவாளிகள் 13 பேர், நவம்பர் 9ம் தேதி எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொல்லான் சட்டமன்றத்தில் மேலவளவு குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கை வைத்த நாளில் இருந்து தமிழக அரசு குற்றவாளிகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
வழக்கமான கொலைக்குற்றம் போன்றதல்ல மேலவளவு கொலைக்குற்றம். அரசியல் சாசனத்திற்கு சவால் விடுகிற விதத்தில் நடைபெற்ற சாதி வெறி கொலைக்குற்றம் இது. இந்த விடுவிப்பு சாதியவாதிகளுக்கு ஊக்கம் அளித்து உள்ளது. சாதியவாதிகளுக்கு ஆதரவான அப்பட்டமான அரசின் நிலைபாடு இது. எனவேதான் உயர் நீதிமன்றமே கண்டித்துள்ளது.
எனவே மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 22 அன்று மதுரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அரசியல் சாசன சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவரும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்’. இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.