மேலூர் ஆர்.சாமி, இன்று பிற்பகலில் மரணம் அடைந்தார். டிடிவி தினகரனுக்கு வலது கரமாக இயங்கியவர். டிடிவி தினகரனுக்காக முதல் கூட்டம் நடத்தியவர்!
மேலூர் ஆர்.சாமி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக.வில் துடிப்பாக இயங்கிய நிர்வாகிகளில் ஒருவர்! எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர்! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இயங்கி வந்தார்.
மேலூர் ஆர்.சாமியை தனது நம்பிக்கையான தளபதியாக கட்சிப் பிரமுகர்களிடம் கூறி வந்தார் டிடிவி தினகரன். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், டிடிவி தினகரனுக்காக முதல் பொதுக்கூட்டத்தை மதுரை மாவட்டம், மேலூரில் ஏற்பாடு செய்தவர் ஆர்.சாமி. அதன்பிறகு இரட்டை சிலை சின்னம் வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி ஆகியோருக்கு மேடை அமைத்துக் கொடுத்து முதல் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தியவரும் மேலூர் ஆர்.சாமிதான்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழாவை நடத்தி, முதல் கொடியேற்ற நிகழ்ச்சியையும் மேலூரிலேயே நடத்திக் காட்டினார் ஆர்.சாமி! இப்படி டிடிவி தினகரனின் சமீபகால அரசியல் செயல்பாடுகளில் ஒவ்வொரு அம்சத்திலும் முதலிடத்தை பெற்றுக் கொண்டிருந்த ஆர்.சாமிக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவர்.
மதுரை அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லும் முன்பாக அவருடன் டிடிவி தினகரன் போனில் பேசினார். அப்போதும், ‘நான் சாவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. உங்களை முதல்வராக பார்க்காமல் சாகிறேனே என்றுதான் வருத்தமாக இருக்கிறது’ என தழுதழுத்தாராம் சாமி. அவருக்கு ஆறுதல் கூறி போனை வைத்திருக்கிறார் டிடிவி தினகரன்.
இன்று (மே 10) பிற்பகலில் சிகிச்சை பலனின்றி சாமி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘தொண்டனுக்குரிய இலக்கணத்தோடு, தலைமையின் மீது தீவிர விசுவாசத்தோடு, தன் உடல்நலன் குறித்த சிந்தனையைக்கூட தள்ளி வைத்துவிட்டு, இயக்க வளர்ச்சியில் முதன்மையாக நின்று பணியாற்றிய கழக அமைப்புச் செயலாளர் என் அன்புத் தோழன் மேலூர் ஆர். சாமி மறைந்த செய்தி கேட்டு துயரத்தால் துடிக்கின்றேன்.’ என கூறியிருக்கிறார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நாளை காலை மேலூரில் ஆர்.சாமியின் இறுதி ஊர்வலம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து அமமுக.வினர் கலந்து கொள்கிறார்கள்.