தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகாரில் நடவடிக்கை கோரிய மனு மீது சென்னை காவல்துறை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக சென்னை திருவேற்காட்டை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அண்மைக் காலங்களில் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செயல்பட்டு வருகின்றார். கவிஞர் வைரமுத்து குறித்து தவறான கருத்தை அவர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து
தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும். அதனை எரிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்த கருத்தால் தமிழகத்தில் பொது அமைதிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அமைதி வாழ்க்கையில் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. பெரியார் குறித்து ஹெச்.ராஜா தெரிவிக்கும் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையிலும் இருந்தாலும் அவர் சார்ந்த கட்சி தலைமை கண்டு கொள்ளவில்லை.
இவரின் கருத்து மூலம் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே ராஜாவை கைது செய்து உரிய மனநல மருத்துவரின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி மார்ச் 7ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகாரில் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மனநோயாளி போல பேசிவரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சம்மந்தப்பட்ட காவல் துறையினரிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரித்த மார்ச் 28க்கு தள்ளிவைத்தார்.