கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மனநலம் பாதித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மேலும் 3 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த ரவிக்குமாரின் மகன் வருண்காந்த் மனநலம் பாதித்தவர், 3 மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி முல்லை நகரில் உள்ள யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் காப்பக நிர்வாகிகள் ஊழியர்கள் சேர்ந்து வருண்காந்தை அடித்துக் கொலை செய்தனர். உடலை யாருக்கும் தெரியாமல் காரில் எடுத்துச் சென்று கவிதாவிற்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
இந்த வழக்கில் காப்பக நிர்வாகிகளான கிரி ராம், ஷாஜுவின் தந்தை செந்தில் பாபு, நிதிஷ், பணியாளர்கள் ரங்கநாயகி, சதீஷ், ஷீலா ஆகிய 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த காப்பக நிர்வாகிகள் லட்சுமணன் மனநல ஆலோசகர் கவிதா உள்ளிட்ட 5 பேரை, போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் தேடுதல் நடத்தி வந்தனர். அதேநேரம் அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவர்களின் போட்டோ, பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மனநல காப்பக மருத்துவர் கவிதா, அவரது கணவர் லட்சுமணன், ஷாஜி ஆகிய மூவரை தனிப்படை போலீசார் கேரளாவில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தற்பொழுது அவர்களை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.