தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால், நவம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் 123 சதவீதம் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மேலும், நவம்பர் 4 அல்லது 5 ஆகிய தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்றைய தினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தென்தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 செ.மீ மழை பதிவானதாக கூறப்படுகிறது.
கனமழை பெய்யக்கூடும் என்பதால் குறிப்பிட்ட மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“