தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (மார்ச் 11) 12 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, சில ஊர்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது.
இதனிடையே, தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, திங்கள்கிழமை (மார்ச் 10) வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, திங்கள்கிழமை வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் சராசரி வெப்பநிலையை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு (மார்ச் 11) வெப்பநிலை குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பேரில், நாளை மறுநாள் (மார்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. குறிப்பாக, சனிக்கிழமை (மார்ச் 8) ஈரோட்டில் அதிகபட்சமாக 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையின் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் இயல்பை விட முறையே 33.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.