2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு 3 வழித் தடங்களில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித் தடங்களில் ரூ.10 ஆயிரத்து 740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக ரூ.11 ஆயிரத்து 368 கோடி மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரெயில் அமைக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.
தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விளக்கத்திலிருந்து ஐகோர்ட்டு வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுளது.
மாமல்லபுரம், உதகை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் ரோப்வே (Ropeway) உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.