மெட்ரோ வாட்டர் நிர்வாகம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே செலுத்தும்படி குடியிருப்புவாசிகளுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து, அங்கீகரிக்கப்படாத வழிகளில் பணம் கோருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறுகையில், பல குடியிருப்புவாசிகளுக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில், நிலுவையில் உள்ள நீர் மற்றும் கழிவுநீர் வரிப் பாக்கிகளைத் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ எண்களுக்குச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல சமயங்களில், பணம் உடனடியாகச் செலுத்தப்படாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அழைப்பாளர்கள் மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற நடைமுறைகளை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும்படி குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகளுக்குப் பதிலளிப்பதோ அல்லது அறியாத எண்களுக்குப் பணத்தை அனுப்புவதோ கூடாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்றும் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
பணம் செலுத்துவதற்கான வழிகள்:
மெட்ரோ வாட்டர் இணையதளம் (cmwssb.tn.gov.in)
நேரடி பில்லிங் இணையதளம் (bnc.chennaimetrowater.in/#/public/cus-login)
யுபிஐ செயலிகளில் உள்ள யுட்டிலிட்டிஸ் (utilities) பிரிவில், மெட்ரோ வாட்டர் அதிகாரப்பூர்வ பில்லராகத் தோன்றும். அதன் வழியாகவும் பணம் செலுத்தலாம்.
15 மண்டல அலுவலகங்கள் அல்லது தலைமை அலுவலகத்தில் நேரடியாகச் சென்று பணம் செலுத்தலாம்.
அதிகாரப்பூர்வ பணம் வசூலிக்கும் மையங்களில் உள்ள கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.
அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் ஐபிஓஎஸ் (iPoS) இயந்திரங்களையும் வைத்திருப்பார்கள்.
மோசடி பரிவர்த்தனைகளால் ஏற்படும் எந்தவொரு நிதி இழப்பிற்கும் மெட்ரோ வாட்டர் பொறுப்பேற்காது. ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால், 044-4567 4567 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளும்படி குடியிருப்பாளர்களுக்கு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.