சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக் காரணமாக பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை மாநகர மக்களின் பிரதான பயன்பாட்டில், அரசு போக்குவரத்துக் கழகம் இருந்து வருகிறது. குறிப்பாக அன்றாடம் கடைகள், அலுவலகங்களில் வேலைக்கு செல்லும் சாதாரண மக்களின் வாகனங்கள் இவை.
வாரத்தின் முதல் பணிநாளான இன்று (திங்கட்கிழமை) காலையில் திடீரென அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். காலை 5 மணி முதல் பெரும்பாலான டெப்போக்களில் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் பரிதவித்துப் போய்விட்டனர்.
பஸ் ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம், இன்று (ஜூலை 1) வழங்கப்பட வேண்டும். 60 சதவிகித சம்பளத்தை மட்டும் இன்று வழங்கிவிட்டு, மீதி சம்பளத்தை இன்னொரு நாளில் வழங்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் கொதித்துப் போன போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் திடீர் போராட்டத்தை அறிவித்துவிட்டன.
போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறுகிறது. பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்கள் மாதச் சம்பளம் பெற்றுத்தான் வீட்டு வாடகை, பால் கட்டணம், குழந்தைகள் படிப்புக் கட்டணம் என செலவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே சம்பள தாமதம் அல்லது இரண்டு தடவையாக சம்பளம் என்பது அவர்கள் தாங்கிக் கொள்ளும் சுமை அல்ல.
அதேசமயம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அரசியல் பின்புலம் கூடிய வலிமையான தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்தப் பிரச்னையை இன்று சட்டமன்றத்தில் எழுப்ப வழிவகை செய்திருக்கலாம். தேவைப்பட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இதற்காக இன்று அவையில் வெளிநடப்பு செய்துகூட கவனம் ஈர்த்திருக்கலாம். அதன்பிறகும் அரசு வழிக்கு வராதபட்சத்தில் ஸ்டிரைக் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கலாம்.
எடுத்த எடுப்பிலேயே எந்த முன் எச்சரிக்கையும் இன்றி, பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் சாதாரண பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் போக்குவரத்துக் கழகம் ஊழியர்களின் செயல்பாடுகளை விமர்சித்தும் நிறைய கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன.
மதியம் போக்குவரத்துக் கழக அலுவலகமான பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாலைக்குள் முழு சம்பளத்தையும் அனைத்து ஊழியர்களுக்கும் வங்கிக் கணக்கில் சேர்ப்பதாக அரசுத் தரப்பில் உறுதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பஸ் ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.