சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிபடுத்தும் முயற்சியாக, சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம், நகரின் 50 முக்கிய இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏ.டி.எம்-களை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.
இணையவழி தொழில்நுட்பம் (IoT) அடிப்படையிலான இந்த வாட்டர் ஏ.டி.எம்-கள், முதல் கட்டமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக குடிநீரை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டு வருகின்றன. சாந்தோம், மெரினா கடற்கரை, ஃபோர்ஷோர் எஸ்டேட், பெரம்பூர், பாண்டி பஜார், அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கம் போன்ற சில பகுதிகள் இவை அமைக்கப்பட இருக்கின்றன.
ரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட ரூ. 5 கோடி மதிப்பிலான இந்த திட்டம் குறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் அல்ட்ரா ஃபில்டர் அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தானியங்கி நீர் விநியோக அலகுகள், பயனர்கள் ஒரு லிட்டர் பாட்டில்கள் அல்லது 150 மில்லி கொள்கலன்களை நிரப்ப அனுமதிக்கும். இவை 3,000 லிட்டர் முதல் 9,000 லிட்டர் வரை சேமிப்பு திறனைக் கொண்டுள்ளன.
ஸ்மார்ட் வாட்டர் ஏ.டி.எம்-களில் நீர் மட்டம் குறையும் போது, அந்தந்த பகுதிகளில் உள்ள மெட்ரோ வாட்டர் பொறியாளர்களுக்கு மீண்டும் தண்ணீர் நிரப்புவது குறித்த தகவல் வந்து சேரும். இந்த அலகுகளுக்கு டேங்கர்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தண்ணீர் ஏ.டி.எம்-கள் 24 மணி நேரமும் செயல்படுவது குறித்து மெட்ரோ வாட்டர் இன்னும் முடிவு செய்யவில்லை. "பாதுகாப்பாக கண்காணிக்கவும், தடையின்றி சேவை வழங்க சரியான நேரத்தில் பழுதுபார்ப்பதை உறுதிபடுத்தவும், அலகுகளுக்கு அருகில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறோம்" என்று ஒரு அதிகாரி கூறினார். மக்களின் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.