ரகுமான், கோவை
Coimbatore district news in tamil: நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி - அப்பர் பவானி - குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரின் அளவான 23 ஆயிரம் கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக பவானியாற்றில் நேற்றிரவு திறந்து விடப்பட்டது. இதனால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, அணையில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி நீரானது அப்படியே நான்கு மதகுகளின் வெளியேற்றப்பட்டது.
இதனால் மேட்டுப்பாளையம் பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றுப்பாலத்தின் கீழ் உள்ள பவானியம்மன் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் மாவட்ட நிர்வாகத்தால் 5 வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானியாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு கரை புரண்டோடுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் காவல் துறை சார்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றார். பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் - ஆற்றில் இறங்கவோ - குளிக்கவோ - மீன் பிடிக்கவோ - கூடாது எனவும் பொதுமக்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil