கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் ஓடும் பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிப்பதால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள சிறுமுகை பகுதியில் பவானி ஆற்றில் இருந்து ஆறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுமுகை பகுதியில் கடந்த இரு மாதங்களாக அடிக்கடி ஆற்று நீர் மாசடைந்து நிறம் மாறி காணப்பட்டதை அடுத்து இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்தில் கடந்த மாதத்தில் மட்டும் இருமுறை ஆய்வு நடத்தினர். ஆற்று நீர் மாதிரியை சேகரித்து ஆய்விற்கும் எடுத்து சென்றனர். ஆனால்,அதன் பின் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆற்றில் சாயக் கழிவுகளை கலக்க விடும் தனியார் ஆலைகளை கண்டு அறிந்து அவற்றின் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக அதே பகுதியில் பவானி ஆற்றின் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் மாறி முற்றிலும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் இத்தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வரும் சிறுமுகை சுற்று வட்டார கிராம மக்கள் இனி யாரிடம் புகார் தெரிவிப்பது என செய்வதறியாது திகைப்பில் ஆழ்ந்து உள்ளனர்.
உடனடியாக இவ்விஷயத்தில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.