மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் நேற்று நள்ளிரவில் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே காரில் தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவெனபற்றி எரிந்து கார் முழுவதுமாக தீக்கிரையானது.
கார் பள்ளத்தில் கவிழ்ந்த வேகத்தில் லாக் ஆகி கொண்டதால் ஓட்டி வந்த இளைஞர் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக தீக்கிரையானது. மேலும், காரை ஓட்டி வந்த இளைஞர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீப்பற்றி எரிந்த காரின் எண்ணை வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இச்சாலையில் பயணித்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் சிறுமுகை லிங்காபுரம் கோவிந்தனூர் பகுதியைச்சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் நவீன்(27) என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“