கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கேரள மாநில எல்லையான முள்ளி வனப்பகுதியில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முள்ளி வழியே உள்ளூர் பழங்குடியின மக்களை தவிர பிறர் கேரளாவிற்குள் நுழையவும் தடை விதித்துள்ளனர்.
2/6
மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் மலைப்பாதையில் கேரள எல்லையோரம் அமைந்துள்ளது முள்ளி வனப்பகுதி. இங்கு வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இச்சோதனை சாவடியை கடந்து பில்லூர் அணைப்பகுதி மற்றும் கேரள பகுதிக்குள் செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
3/6
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம்- கோத்தகிரி மலைப்பாதை தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டிருந்த தேச விரோத கருத்துக்கள் மற்றும் தமிழக எல்லையோரம் உள்ள கேரள வனப்பகுதி மலைக்கிராமங்களில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் உள்ளிட்ட சம்பவங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்பு இருக்கலாம் என நக்சல் தடுப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisment
4/6
இதையடுத்து, முள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முள்ளி வழியே சுமார் 300 மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள கேரள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே தகுந்த ஆவணங்களை காட்டி கடந்து செல்ல முடியும்.
5/6
மேலும் இவ்வழியே பில்லூர் அணை பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
6/6
தமிழக மற்றும் கேரள அரசால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் முள்ளி சோதனை சாவடி பகுதியில் ஒட்டப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்