ராசிமணலில் அணையை கட்டி மேட்டூர் அணை மூலம் பாசத்திற்கு பயன்படுத்தினால் கடலுக்கு செல்லக்கூடிய தண்ணீரில் 64 டிஎம்சியை தேக்கி வைத்து தமிழ்நாடு பாசனத்திற்கு பயன்படுத்த முடியும், என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சீர்காழியை அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காவிரியில் கடலில் கலக்கும் உபரி நீரை தடுத்து ராசிமனல் அணை கட்டி மேட்டூர் அணை மூலமாக பாசனத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பிஆர்.பாண்டியன் கூறுகையில்: ’கேரள கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பேரழிவு பெருமழையாக பெய்து வருகிறது.
உபரி நீர், கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் திறந்து விட்டது. உரிய காலத்தில் தண்ணீரை திறக்காததால் சென்ற ஆண்டு 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள், இந்த ஆண்டு குறுவையை முற்றிலும் இழந்து விட்டனர்.
தற்போது சம்பா சாகுபடி செய்ய முடியுமா? என்கிற அச்சத்தில் இருந்த விவசாயிகளுக்கு மேட்டூர் அணை நிரம்பியதால் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர்.
மேட்டூர் உபரி நீர் கொள்ளிடம் வழியாக கலக்க செய்வதை பார்த்து விவசாயிகள் மனமடைந்துள்ளனர். கொள்ளிடம் கடற்கரை, காவிரி ஆற்று இருபுறமும் இருக்கிற நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடல் நீர் உட்புகுந்து குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
ஒரு பக்கம் காவிரி டெல்டாவிற்கு இதுவரையிலும் பாசன நீர் சென்றடையவில்லை. கிடைக்கும் தண்ணீரை கொண்டு செல்வதற்கு உரிய கட்டுமான பணிகளை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு மறுப்பதால் பல இடங்களில் அவசர கால பணிகளைக் மேற்கொள்ள முடியாமல் காலங்கடந்து துவங்கி உள்ளனர்.
விளைவு பாசன நீரை விளை நிலப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் பறி தவிக்கின்றனர்.
கர்நாடகா மேகதாட்டு அணை கட்டினால் ஒட்டுமொத்தமாக விலங்கினங்கள் அழியும. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அப்புறப்படுத்த வேண்டும். 15,000 ஏக்கருக்கு மேற்பட்ட வனம் அழிக்கப்படும். எனவே மத்திய அரசு அனுமதி மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு ராசிமனல் அணை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை துவங்கினால் பரிசீலிக்க தயாராக உள்ளது.
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணை நிரம்பி கடலுக்கு 2.50 லட்சம் டிஎம்சி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
ராசிமணலில் அணையை கட்டி மேட்டூர் அணை மூலம் பாசத்திற்கு பயன்படுத்தினால் கடலுக்கு செல்லக்கூடிய தண்ணீரில் 64 டிஎம்சியை தேக்கி வைத்து தமிழ்நாடு பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். எனவே உடனடியாக ராசிமணல் அணைக்கட்டுமான பணியை துவங்க வேண்டும். மேகதாட்டு அணை கட்டுமான பணிக்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திட வேண்டும்.
கொள்ளிடம் இரு கரைகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஐந்து கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் கதவணைகள் அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.
வீராணம் ஏரி மூலம் சென்னைக்கு 40 சதவீதம் குடிநீரை வழங்கி வருகிறோம். ஏரியின் கொள்ளளவில் 75 சதவீதம் சேமிக்கும் தன்மையை ஏரி இழந்துவிட்டது.
எனவே, உடனடியாக கொள்ளளவை உயர்த்துவதற்கு தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள மறுத்தால் அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை காவிரி டெல்டாவில் தீவிரப் படுத்துவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன், மயிலாடுதுறை வடக்கு மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன், தலைவர் சீர்காழி கணேசன், தெற்கு மாவட்ட செயலாளர் பண்டரிநாதன், தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“