Advertisment

மீண்டும் நிரம்பிய மேட்டூர் அணை; 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது

இந்தாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை மீண்டும் எட்டியது

author-image
WebDesk
New Update
Mettur dam

மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நீர் திறப்பால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 30-ம் தேதி எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, 16 கண் மதகுகள் வழியாக அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.

அணைக்கான நீர்வரத்து சரிவின் காரணமாக, கடந்த 7-ம் தேதி 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கர்நாடகாவில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,548 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 24,352 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று காலை முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நீர் திறப்பு விநாடிக்கு 21,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 119.24 அடியில் இருந்து 119.65 அடியாகவும், நீர் இருப்பு 92.26 டிஎம்சியில் இருந்து 92.91 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை மீண்டும் எட்டியுள்ளது. அணைக்கு கூடுதலாக நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் எந்த நேரத்திலும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, அணைக்கு வரும் நீரின் அளவை கொண்டு, நீர் மின் நிலையங்கள் வழியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கான நீரின் அளவு அதிகரித்து வருவதால், விரைவில் 120 அடியை எட்டவுள்ளது. அப்போது, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும் என்றனர்.

 செய்தி க.சண்முகவடிவேல்

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment