மேட்டூர் அணையில் நீர்மட்டம் 5 வருடங்களுக்கு பின்னர் 100 அடியை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் தொடர் மழையால் நிரம்பிய அணைகளில் இருந்து 1 லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வந்த தண்ணீரால் மேட்டூர் அணை 103 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து, அணையில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீரை திறந்தார்.
இந்த விழாவில் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், காவிரி பிரச்னையில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி அதிமுக அரசு வெற்றியடைந்துள்ளது என்றார். மேலும் மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு ஸ்தூபியை கட்டவும், பூங்காவை மேம்படுத்தவும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில், ஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்ற பிரச்சனையில் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், காவிரி பிரச்னையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை அதிமுக எம்பிக்கள் தான் அதற்காக 22 நாட்கள் போராட்டம் நடத்தி சபையை நடைபெறவிடாமல் செய்தனர். அப்போது தமிழகத்திற்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக ஆதரவு அளிக்காது என்று முதல்வர் கூறினார்.