மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர் திறப்பு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. காவிரி கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. தற்போது கூடுதல் நீர் திறப்பால் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அணை நிரம்பும் பட்சத்தில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒரு சில கிராமங்களில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புனித நீராடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கூடுதல் நீர் திறக்கப்படுகிறது. எனவே ஆற்றில் நீர் பெருக்கு அதிகமாகவும் ஆழமாகவும் இருக்கும் என்பதால் பொதுமக்கள் இந்த ஆண்டு ஆற்றில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.