காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது.
இதனிடையே நேற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மட்டும் அல்லாது மேட்டூர் சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் 3 நாட்களில் 191.2 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 6,233 கன அடியாக இருந்த நிலையில் இன்று விநாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.82 அடியில் இருந்து, 109.33 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.74 டி.எம்.சியிலிருந்து, 77.46 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் 0.81 அடியாகவும், நீர் இருப்பு 1.12 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க.சண்முகவடிவேல்