கர்நாடகாவில் கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் பெருமளவு நிரம்பிவிட்டது. இதனால், உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 81,552 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 93,828 கனஅடியாகவும், இரவு 1,23,184 கனஅடியாகவும் அதிகரித்தது. அதேபோல, அணை நீர்மட்டம் நேற்று காலை 99.11 அடியாக இருந்த நிலையில், நேற்று இரவு 103.13 அடியாக உயர்ந்தது. அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பகுதியை தண்ணீர் எட்டியது.
அணை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியதால் நீர்வளத் துறை செயற் பொறியாளர் சிவக்குமார், உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ் மற்றும் ஊழியர்கள் அணையில் பூக்களைத் தூவி, காவிரியை வணங்கினர். குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்இருப்பு 68.96 டிஎம்சி. கடந்த 12 நாட்களில் அணை நீர்மட்டம் 58.48 அடியும், நீர்இருப்பு 53.26 டிஎம்சியும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. 405 நாட்களுக்குப் பின்னர் நேற்று 100 அடியைத் தாண்டியுள்ளது. அணை வரலாற்றில் 71-வது முறையாக நீர்மட்டம் 100 அடியைக் கடந்துள்ளது. 2005-06-ல் அணை நீர்மட்டம் அதிகபட்சமாக 428 நாட்கள் தொடர்ந்து 100 அடிக்கும் மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியைத் தாண்டியுள்ளதால் நீர்வளத் துறை அதிகாரிகள் அணையின் 16 கண் மதகு, வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நாளை (இன்று) மாலைக்குள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியைத் தாண்டும்’ எனத் தெரிவித்து உள்ளது.
/indian-express-tamil/media/media_files/hZeo9y4pmV2buChIwn0d.jpeg)
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "அணையின் மொத்த நீர் இருப்பு 93 டிஎம்சி. தற்போது 69 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்" என்றனர்.
இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதையடுத்து, ஒகேனக்கல் தொடக்கப் பள்ளி, ஊட்டமலை நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் 3 தனியார் மண்டபங்கள் என 6 இடங்களில் அவசரகால முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்துள்ளனர். மேலும், ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான பகுதிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/qwrDycg7KCOzSRs5rKys.jpeg)
இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களுக்கு தெரிவித்ததாவது;கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/Gqy1x8wZ20vTRu5glNYj.jpeg)
மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவை எட்டும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளவும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“