கர்நாடகாவில் போதியளவு மழை பொழிவு இல்லாததால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு சரிந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு மிகக் குறைந்த அளவு தண்ணீரே வந்துக்கொண்டிருக்கின்றது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து போதியளவு நீர்வரத்து இல்லாததால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இதனால், குறுவை நெற்பயிரை காப்பாற்ற முடியுமா என காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
கேரளம், கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர், மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அன்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 867 கன அடியாகவும், நீர்மட்டம் 103 அடியாகவும் இருந்தது. அன்று முதல் அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்தே, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 16-வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 233 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 176 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா குறுவை பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 94.82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 94.10 அடியாக சரிந்துள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13 நாட்களில் 11 அடி குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 94.10 அடியாக உள்ளது. நீர்வரத்து 223 கன அடியாக உள்ள நிலையில், தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணைக் கால்வாய் ஆற்றில் பல இடங்களில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அதனால், அதில் விநாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே நீர் திறக்கப்படுவதால், பல்வேறு கிளை வாய்க்கால்களில் இன்னும் நீர் திறக்கப்படவில்லை. இதனால் இந்த பாசனப் பகுதிகளில் இன்னும் குறுவை சாகுபடி தொடங்கப்படாமல் உள்ளது.
மேட்டூர் அணை திறப்பை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். நிகழாண்டு குறுவை சாகுபடி இலக்காக 5.20 லட்சம் ஏக்கரை வேளாண் துறை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.
இதற்கேற்ப, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டமும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை டெல்டாவில் 2.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதாலும், அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவதாலும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற காவிரியில் போதிய நீர் வருமா என டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தர வேண்டிய மாதாந்திர நீர்ப் பங்கீட்டை, தமிழக அரசு உடனடியாக காலம் தாழ்த்தாமல் கேட்டுப்பெற, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்கள் தெரிவிக்கையில்; கேரளம், கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. இருப்பினும் ஆகஸ்ட் இறுதி வரை அந்த மழை இருக்கும்.
தற்போதைய நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பையும், டெல்டாவில் அவ்வப்போது பெய்யும் மழை நீரையும், பம்பு செட்டுகளின் நீரையும் வைத்து குறுவை சாகுபடியை ஓரளவுக்கு சமாளித்து விட முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றனர்.
இருப்பினும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், தண்ணீர் திறப்பு குறைக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.