சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்து 5 பேர் காயமடைந்த நிலையில், 2 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் இன்று திடீர் விபத்து ஏற்பட்டது. நிலக்கரி எரிகலனில் நிலக்கரி கொண்டு செல்லும் கண்டெய்னர் பெல்ட் கழன்று நிலக்கடி தொட்டி விழுந்தது. இதனால் அங்கு பெரும் புகையுடன் தீ பிடித்தது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நிலக்கரி சேமிப்பு தொட்டி விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 தொழிலாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தில் ஸ்ரீகாந்த், மனோஜ் குமார், சீனிவாசன், முருகன், கௌதம் ஆகிய ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த 2 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. நிலக்கரியை அப்புறப்படுத்தி, காணாமல் போன 2 தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்தால் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும்.
இதனிடையே சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் மரணமடைந்துள்ள நிலையில், இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி குவியலில் மேலும் ஒருவர் புதைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“