எம்.ஜி.ஆர். பிறந்த நாள் இன்று! இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாளை முன்னிட்டு அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:
எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழாவினை உலகெங்கும் கொண்டாடி மகிழும், அ தி.மு.க. உடன்பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளும், வணக்கங்களும் உரித்தாகுக. தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில், அவர் தோற்றுவித்த மக்கள் பேரியக்கமான அண்ணா தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்திட வேண்டும்; அதற்கேற்ப நம்முடைய அரசியல் பயணமும், பணிகளும் அமைந்திட வேண்டும்’’ என்று அம்மா சூளுரைத்தவாறு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அவருக்கு செலுத்தும் நன்றிக் காணிக்கையாக தமிழகம் முழுவதும் கொண்டாடி பெருமிதம் அடைகிறோம். எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற தமிழக மக்களின் நலம் பேணி, எண்ணில்லா அரும் பணிகளை நடைமுறைப்படுத்தும் நல்லாட்சியை தமிழகத்தில் நிலைபெறச் செய்த மகிழ்ச்சியோடு, புரட்சித் தலைவரின் பிறந்த நாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
அம்மாவின் தியாகத்தால் மலர்ந்த இந்த நல்லாட்சியை, அம்மாவின் மறைவிற்குப் பிறகு அபகரிக்க சிலரும், கவிழ்த்திட சிலரும் செய்த சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் முறியடித்து, கழகத்தின் நலனே தொண்டர்களின் நலன், கழகத்தின் வெற்றியே தொண்டர்களின் வெற்றி; நம்மைவிட கழகமே பெரியது, கழகத்திற்காக வாழ்வதே நமக்குள்ள பெரும் சிறப்பு’’ என்று புரட்சித் தலைவி அம்மா மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியதை மனதில் ஏற்று, கழக ஆட்சியை நிலைபெறச் செய்திருக்கிறோம்.
அம்மா, தனக்குப் பின்னும் பல ஆண்டுகள் அதி.மு.க.வின் ஆட்சி தொடரும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். எம்.ஜி.ஆரின் பேரியக்கத்தை ஒற்றுமை உணர்வோடு கட்டிக் காத்து, வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்வது தான், ஓர் ஆசானாக, அன்புத் தாயாக, அளவில்லாக் கருணை கொண்ட தெய்வமாக, நம்மையெல்லாம் வழிநடத்தி வந்த அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை கழக உடன்பிறப்புகள் அனைவரும் நினைவில் கொண்டு பணியாற்றுவோம். எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால கழக அரசு, தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய பணிகளை நினைவில் கொண்டு, அந்த மாபெரும் தலைவர் வகுத்தளித்த பாதையிலேயே, அம்மா உருவாக்கிய அம்மாவின் அரசும் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரும், அம்மாவும் விரும்பியவாறு தமிழக மக்களுக்கு இன்னும் பல பணிகளை ஆற்ற, கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஜி.ஆர். தோல்வி அறியாத சாதனையாளர். தன்னுடைய அரசியல் வாழ்வை மட்டுமல்லாமல், கலையுலக வாழ்வையும் கொள்கை சார்ந்த வாழ்வாக வாழ்ந்தவர்.
தனக்குப் பின் கழகத்தை வழிநடத்த, தலைமைப் பொறுப்புக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அம்மாவுக்கு அளித்த சிறப்புக்கு உரியவர். வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமையாக ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்று வாழ்ந்த இரு பெரும் தலைவர்களால் பேணி வளர்க்கப்பட்ட இயக்கம் நம்முடைய அண்ணா தி.மு.க. என்னும் பேரியக்கம். இந்த இயக்கம், புரட்சித் தலைவரிடம் அரசியல் பாடம் பயின்ற அம்மாவின் தலைமையில் எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கழகத் தொண்டர்களின் நலன்களையும், அவர்களது உணர்வுகளையும் மட்டுமே முன்னிறுத்தி நடைபோட்டதைப் போல, மக்கள் பணி, கழகத்தின் உயர்வு, கழகத் தொண்டர்களின் உணர்வு இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடைபோடும்.
எம்.ஜி.ஆரின் தலைமையிலும், அம்மாவின் தலைமையிலும், எப்பொழுதும் கட்டுப்பாட்டோடும், கடமை உணர்வோடும் பணியாற்றி வந்த நாம், அதே உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் கழகப் பணிகளை ஆற்றுவோம்.எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில் நாம் அனைவரும் பணியாற்றுவோம் என்று புரட்சித் தலைவரின் பிறந்த நாள் விழா நேரத்தில் சூளுரை ஏற்போம். இவ்வாறு கூறியுள்ளனர்.