/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-13T153154.475.jpg)
அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழாவிற்காக எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், "தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த மங்காப் புகழ்பெற்ற மாமணி; எத்தனை எத்தனை தலைமுறைகள் தவம் செய்து பெற்றார்களோ என்று வியந்து பார்க்கும் வண்ணம் நமக்குக் கிடைத்திட்ட தெய்வப் பிறவி; ஏழை, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்த வள்ளல்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், கோடானு கோடி எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும், அனைத்துத் தமிழர்களுக்கும், எனது மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், நம்முடைய எம்ஜிஆரின் பிறந்த நாள் என்பத ஒரு மகிழ்ச்சியையும், உணர்வுப் பூர்வமான அனுபவங்களையும், தாய்மைப் பாசத்தையும், கருணையையும், மனித நேயத்தையும், மானுடப் பற்றையும் மலரச் செய்யும் பொன்னாள் தான் இந்நாள். ”வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்” என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், எம்ஜிஆர் என்று தான் பதில் வரும்.
அந்த அளவிற்கு எம்ஜிஆர் தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட மனிதராக, திரைத்துறையில் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக, அரசு நிர்வாகத்தில் ஆட்சி செய்யும் நல்இதயம் படைத்த தீரமும், வீரமும் கொண்டு நிர்வாக ஆற்றல் படைத்த தலைவராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றிவாகை சூடும் சாதனையாளராக, இவரைப் போல் இன்னொருவர் பிறக்க முடியாது என்று அவருடைய எதிரிகளும் தங்கள் மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சரித்திர நாயகராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
எம்ஜிஆர் அவர்களுடைய ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், ஒரு சாதாரண தனி மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன.
எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உட்பட ஏழை, எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள் தான் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கிறது. இனி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கங்கள் நடைமுறைப் படுத்த வேண்டும்; இதுபோன்ற திட்டங்களைத்தான் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு, வரலாற்றையே `எம்ஜிஆருக்கு முன், எம்ஜிஆருக்குப் பின்’ என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்குரியவர் நம் எம்ஜிஆர். அவர் விட்டுச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய அரசியல் முறையும் தான் நமக்கெல்லாம் முன் மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றி வாகை சூடுவோம். ஆர்வத்தோடு தொண்டாற்றுவோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாட்சியை மலரச் செய்வது, நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.