எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களை நடத்தின. இது அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. பொதுமக்களே அளவுக்கு மீறிய அந்த கொண்டாட்டங்களை பெரிதாக ரசிக்கவில்லை.
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைகாலம் நிறைவுசெய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன்விடுதலை செய்யப்படுவதாகவும் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.