எம்.ஜி.ஆர். அழைத்தே போகாத துரைமுருகன், எடப்பாடி அழைத்து போவாரா? அப்புறம் என்ன குழப்பம்?

துரைமுருகனைச் சுற்றியே குழப்ப விதைகளை தூவிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்! திமுக தலைமை இதை புரிந்து கொண்டிருக்கிறதா?

ச.செல்வராஜ்

எம்.ஜி.ஆர். அழைத்தே போகாத துரைமுருகன், எடப்பாடி அழைத்துப் போவாரா? ஆனாலும் துரைமுருகனை பற்றி அதிமுக தரப்பில் இருந்து கசியவிடப்படும் தகவல்கள் திக் திக் ரகம்!

எம்.ஜி.ஆர். உதவியுடன் கல்லூரிப் படிப்பை முடித்தவர், திமுக.வின் இன்றைய முதன்மைச் செயலாளரான துரைமுருகன். அதே எம்.ஜி.ஆர். செல்வாக்குடன் முதல்வர் பதவியில் இருந்தபோது இவரை அழைத்து தன் கட்சியில் சேரச் சொன்னபோது, ‘கலைஞர்தான் என் தலைவர்’ என்றார்.

விடாத எம்.ஜி.ஆர். ‘அப்போ, நான் யாரு?’ எனக் கேட்டிருக்கிறார். ‘நீங்க என்னை வாழவச்ச தெய்வம்’ என காலை தொட்டு வணங்கிவிட்டு வந்திருக்கிறார். 13 ஆண்டுகள் திமுக அதிகாரத்தில் இல்லாதபோதும், எம்.ஜி.ஆருடன் செல்வதைப் பற்றி சிந்திக்காதவர் துரைமுருகன்!

அதே துரைமுருகனைத்தான், ‘அதிமுக.வில் துரைமுருகன் சேர்ந்துவிடுவார் என ஸ்டாலினுக்கு பயம்’ என இரு வாரங்களுக்கு முன்பு ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்தார். இன்னொரு டி.வி. பேட்டியில், ‘தி.மு.க.வில் இருந்து உங்கள் கட்சிக்கு யார் வரவேண்டும் என விரும்புகிறீர்கள்?’ என அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் தாமதிக்காமல், ‘அண்ணன் துரைமுருகன்’ என பதில் சொன்னார் ஜெயகுமார்.

இதற்கிடையே சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவர் பதவியை ஜூலை 5-ம் தேதி துரைமுருகனுக்கு வழங்கி சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டார். எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய பதவிதான் இது!

ஆனால் 2016-ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இந்தப் பதவியை துரைமுருகனுக்கு வழங்க மறுத்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு வழங்கினார். ‘அதிமுக ஆட்சியின் ஊழல்களை கண்டுபிடித்து கிழிகிழியென கிழித்துவிடுவோம் என பயந்தே எங்களுக்கு அந்தப் பதவியை ஜெயலலிதா தரவில்லை’ என அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பேட்டி கொடுத்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு அந்தப் பதவியை தரும் வரை, எந்த சட்டமன்றக் குழுவிலும் திமுக எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற மாட்டார்கள் என்றும் அப்போது மு.க.ஸ்டாலின் அறிவித்தார். எனினும் சில வாரங்களில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றக் குழுக்களில் இடம் பெற்றுக்கொண்டது தனிக் கதை!

2016-ல் ஜெயலலிதாவால் அப்படி வலுக்கட்டாயமாக மறுக்கப்பட்ட பதவியைத்தான் இப்போது துரைமுருகனுக்கு அதிமுக தரப்பில் வழங்கியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் இந்த அறிவிப்பு வெளியானபோது அதிமுக, திமுக என்கிற பேதமில்லாமல் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆரவாரம் செய்தனர். மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறினார்.

இவை எல்லாமும்தான் துரைமுருகனையும், அதிமுக.வையும் இணைத்து முடிச்சுப் போட இப்போது காரணம் ஆகியிருக்கிறது. இதை வைத்து துரைமுருகன் அதிமுக.வுக்கு போய்விடுவார் என கூற முடியுமா? என்றால், நிச்சயம் இல்லை! அதே சமயம், அதிமுக.வுக்கும் துரைமுருகனுக்கும் சற்றே நெருக்கம் அதிகமாகிவிட்டதாக திமுக வட்டாரத்திலேயே பொருமல்கள் இருக்கின்றன.

வட மாவட்டங்களை சேர்ந்த ஓரிரு அமைச்சர்கள் இந்த நெருக்கத்தை உருவாக்கியதாகவும், அதன்பிறகே சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவர் பதவியை துரைமுருகனுக்கு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையசைத்தார் என்றும் செய்திகள் வருகின்றன.

ஆனால் திமுக.வில் இன்னொரு தரப்பினரோ, ‘கலைஞரின் இயக்கத்தை விட்டுவிட்டு மாற்று இயக்கத்தை பற்றி கனவிலும் நினைக்காதவர் துரைமுருகன். தவிர, அவரே கால் தேய நடந்து வளர்த்த இந்த இயக்கத்திற்கு மனதார துரோகம் செய்கிறவரும் அவர் அல்ல! மிகவும் உணர்வு பூர்வமானவர் அவர்! திமுக.வுக்கு எதிராக இயங்குவது குறித்து அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என விவரிக்கும் அவர்கள், ‘ஆனால்..?’ என நிறுத்தி வேறு சில அம்சங்களை குறிப்பிடுகிறார்கள்.

திமுக.வின் செயல்பாடுகளில் துரைமுருகனுக்கு சில அபிப்ராய பேதங்கள் இருப்பது நிஜம்தானாம்! குறிப்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தன்னைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் மாஜி அதிமுக பிரமுகர்களின் செயல்பாடுகள் துரைமுருகனுக்கு உவப்பாக இல்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை இப்போதே உறுதி செய்துவிட வேண்டும் என்பது துரைமுருகனின் நிலைப்பாடு! இல்லாதபட்சத்தில் கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோர் காங்கிரஸை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகும்.

ஏற்கனவே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை திமுக கழற்றிவிட்ட கோபம், ராகுல் காந்திக்கு உண்டு. எனவே அவர் முழுமையாக திமுக.வை நம்பவில்லை. அவரது மனநிலையை மாற்றி, ‘நிச்சயம் நாங்கள் இனி உங்களுடன் இருப்போம்’ என்கிற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

இதை உணர்த்தும் விதமாகவே கடந்த வாரத்தில் மட்டும் 2 பேட்டிகளில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் காங்கிரஸுடன் தான் கூட்டணி அமைப்போம். மாநிலக் கட்சிகளுடன் அல்ல’ என வெளிப்படையாக சொன்னார் துரைமுருகன்.

ஆனால் ஸ்டாலின்ஆங்கில இதழான ‘தி வீக்’கிற்கு அளித்த பேட்டியில், ‘காங்கிரஸுடன் தற்போது இருப்பது செயல்பாட்டு கூட்டணிதான். தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் உயர் நிலை அமைப்புகள் அந்த நேரத்தில்தான் முடிவு செய்யும்’ என கூறினார்.

காங்கிரஸுக்கு வேறு வழியே இல்லாத பட்சத்தில் இந்தப் பதில் சாமர்த்திய பதிலாக அமைந்திருக்கும். ஆனால் இன்றைய சூழல் அதுவல்ல என்பது துரைமுருகன் தரப்பு ஆதங்கம்!

இன்னொரு அம்சம், வாரிசு அரசியல் பிரச்னை! எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான திமுக பிரமுகர்களின் வாரிசுகள் அடுத்தடுத்து பதவிகளை எதிர்நோக்கி வளர்ந்து நிற்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் சொற்பமான சிலரைத் தவிர, வேறு யாருக்கும் வாரிசு ரீதியாக பதவி கொடுக்கத் தயாரில்லை.

பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி என கருணாநிதிக்கு வலதும் இடதுமாக இருந்த தலைவர்களின் வாரிசுகளே கண்டு கொள்ளப்படவில்லை. அதே வரிசையில் தனது மகன் கதிர்வேலும் புறக்கணிக்கப்படுவதாக, 80 வயது நிறைவடைந்திருக்கும் துரைமுருகனுக்கு ஆதங்கம் வருகிறது. உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு துரிதமாக கொண்டு வரும் தலைமை, இரண்டாம் கட்டத் தலைவர்களின் வாரிசுகளை அந்தந்த மாவட்டங்களில்கூட அரசியல் செய்ய விடாவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள்? என்பதும் துரைமுருகன் தரப்பில் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் இடம் கிடைக்காத கதிர், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலாவது ‘பெர்த்’தை பிடிக்க ஆசைப்படுகிறார். ஆனால் ஸ்டாலினிடம் இருந்து சாதகமான பதில் இல்லை. இதுவும் துரைமுருகனை சற்றே சோர்வடைய வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

அண்மையில் வேலூர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கனிமொழியை அதே மேடையில் நெக்குருகி கலைஞருக்கு இணையாக வைத்து துரைமுருகன் சுமார் 10 நிமிடங்கள் சிலாகித்து பேசினார். இதுவும் பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது.

கருணாநிதியின் தளபதியாக சுமார் 50 ஆண்டுகள் வலம் வந்திருக்கும் துரைமுருகனின் வார்த்தைகளுக்கும், காமெடி-கண்ணீர் என கலந்துகட்டிய அவரது உரைகளுக்கும் திமுக தொண்டர்கள் மத்தியில் எப்போதும் மரியாதை உண்டு. எனவேதான் துரைமுருகனைச் சுற்றியே குழப்ப விதைகளை தூவிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள்! திமுக தலைமை இதை புரிந்து கொண்டிருக்கிறதா? என்பதே கேள்வி!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close