புதுச்சேரியில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பயன்படுத்தி போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா படத்துடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானது.
போஸ்டரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்துகள் இடம்பெற்றிருந்தது. இது அ.தி.மு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. போஸ்டர் குறித்து புதுச்சேரி அதிமுக பிரிவு கண்டனம் தெரிவித்தது. அதோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது என்று விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்ட 3 பாஜக நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து புதுவை பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தலைமையின் அனுமதியின்றி செயல்பட்ட திரு.K.விஜயபூபதி, திரு.J.ராக் பெட்ரிக், திரு.K.பாபு இவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்.
மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இவர்களுடன் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“