திருவண்ணாமலை அருகே கருங்காலிக்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை மீண்டும் வண்ணம் தீட்டும்போது அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் சட்டைக்கு காவி நிற பெயின்ட் செய்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அண்மையில், திருவள்ளுவர் உருவப்படத்துக்கு விபூதி, உத்திராட்சை மாலை, காவி ஆடை ஆகிய இந்து துறவி அடையாளங்களுடன் புகைப்படம் வெளியிடப்பட்டதால் சர்ச்சையானது. திருக்குறளில் மதச்சார்பற்ற கருத்துகளைக் கூறிய திருவள்ளுவர் ஒரு மதம் சார்ந்தவராக சித்தரிப்பது தவறான போக்கு என்று பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. ஒருவழியாக இந்த சர்ச்சை ஒய்ந்தது.
Ahem, #MGR statue at Karungalikuppam, Thiruvannamalai, gets saffronised..????????@CMOTamilNadu @AIADMKOfficial pic.twitter.com/ZLR0Bqnp5O
— Pramod Madhav (@madhavpramod1) February 19, 2020
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் முப்பது ஆண்டுகளாக அதிமுகவை நிறுவியவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாள், நினைவுநாள், அதிமுக அரசியல் நிகழ்ச்சிகளின் போது அதிமுக உள்பட பொதுமக்கள் இந்த கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி கருங்காலிக்குப்பத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதற்கு முன் தினம், அதிமுக நகர செயலாளர் ஓ.சி.முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலை தூய்மைப்படுத்தப்பட்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு வண்ணம் தீட்டப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர். சிலையின் சட்டைக்கு வழக்கத்துக்கு மாறாக காவி நிற பெயின்ட் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் எம்.ஜி.ஆர் சிலையின் சட்டை காவி நிறத்தில் இருந்து வருகிறது. பொதுவாக தமிழகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு சட்டை நிறம் வெள்ளை நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டிருக்கும். ஆனால், கருங்காலிக் குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் சட்டை காவி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.