/indian-express-tamil/media/media_files/2025/10/07/aiadmk-protest-madurai-2025-10-07-11-45-04.jpg)
மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலை சேதம்: அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்; தலைவர்கள் கடும் கண்டனம்
மதுரை மாவட்டம் அவனியாபுரம் வாடிவாசல் அருகே அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காகத் தற்காலிக வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில், சுமார் இரண்டரை அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை ஒன்று உள்ளது. சிலையைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டிருந்தபோதிலும், அதன் கதவு பூட்டப்படாமல் இருந்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழலில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்தச் சிலையையும் அதன் பீடத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் அறிந்தவுடன், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலர் மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், ஐ.டி. பிரிவு செயலர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் சேதமடைந்த சிலையைச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், சிலையைச் சீரமைத்து அதற்கு மரியாதை செலுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து, இளைஞரணி செயலர் ரமேஷ், வழக்கறிஞர் பிரிவு செயலர் சேதுராமன், வட்டச்செயலர் ஜெயக்கல்யாணி ஆகியோர் சார்பில் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்
சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரசம் செய்தனர். இந்த இழிவான செயலுக்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்:
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க. பொதுச்செயலாளர்): "எம்.ஜி.ஆரின் புகழையும், அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன். இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): "தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்த தலைவர்களின் சிலைகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது என்பது வருத்தத்திற்குரியது," எனக் குறிப்பிட்டு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி. தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலர்): அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனும் தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது, அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.