ஜெயலலிதாவை ஏமாற்றிய எம்.ஜி.ஆர்

இன்று ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள். அவர் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான பகுதியை தெரிந்து கொள்ளலாம்.

ச.கோசல்ராம்

தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா பல சாதனைகள் படைத்தார். சினிமாவிலும், அரசியலிலும் அவருக்கு துணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் ஆரம்பித்த கட்சிக்கு ஜெயலலிதா வாரிசாக இருந்து மறைந்துவிட்டார். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த நெருக்கும் உலகுக்கே தெரிந்ததுதான். ஆனால் ஜெயலலிதாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்த எம்.ஜி.ஆர் அவரை ஏமாற்றிவிட்டார் என்பது பலருக்குத் தெரியாது.

இந்த தகவலை பத்திர்கையாளரும் எழுத்தாளருமான வாஸந்தி எழுதிய ’ஜெயலலிதாவின் மனமும் மாயையும்’ நூலில் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா சினிமாவில் நடித்து கொண்டிருந்த நேரத்தில், சிலர் சதி செய்து எம்.ஜி.ஆருடன் நடிக்க விடாமல் செய்துவிட்டனர். சிவாஜியுடன் நடிக்கவும் வாய்ப்பு வரவில்லை. ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஜெயலலிதாவுக்கும் ஜெய்சங்கருக்கும் நெருக்கம் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்ட காலம் அது. ஜெய்சங்கரை போனில் அழைத்த முதல்வர் எம்.ஜி.ஆர், படத்தில் இருந்து விலகுமாறு சொல்லியிருக்கிறார். அவர் மறுக்கவே அவரது மனைவியை போனில் அழைத்த எம்.ஜி.ஆர். உன் கணவர் உயிருடன் இருக்க வேண்டுமானால், ஜெயலலிதாவுடன் நடிப்பதை ரத்து செய்ய சொல்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் முறிந்து போனது. சினிமாவில் இருந்து விலகிய ஜெயலலிதா பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்திருந்தார். குமுதம் வார இதழில் ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற தனது வாழ்க்கை தொடரை எழுத ஆரம்பித்தார், ஜெயலலிதா. அந்த தொடரை நிறுத்துமாறு முதல்வர் எம்.ஜி.ஆர் வலியுறுத்தவே நிறுத்தப்பட்டது.

ஜெயலலிதா பொது வாழ்வில் இல்லை என்றாலும் எம்.ஜி.ஆருடன் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில், நேபாளம் சென்று இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

ஜெயலலிதாவின் பள்ளி தோழி சாந்தினி இதை ஒப்புக் கொண்டுள்ளார். ‘‘என்.ஜி.ஆரை நான் காதலிக்கிறேன். என் வாழ்வில் இருக்கக் கூடிய ஆண் அவர் ஒருவர்தான் என்று ஜெயலலிதா என்னிடம் சொன்னதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். நான், ‘எம்.ஜி.ஆர். எத்தனை வயதானவர். அவரையா திருமணம் செய்து கொள்ளப்போற’ என்று கேட்டேன். கிட்டத்தட்ட கத்தினேன். ‘பிரியத்துக்கு வயது ஒரு தடையில்லை’ என்றாள் ஜெயலலிதா. ‘அவரால்தான் நான் என் தொழிலிலே இவ்வளவு முன்னேற்றம் அடைந்தேன். அவர்தான் எனக்கு எல்லாம்’ என்றாள். ஆனால் கல்யாணம் செய்து கொண்டாளா இல்லையா என்பது எனக்குத் தெரியாது’’ என்று சாந்தினி சொல்லியுள்ளார்.

இதனை பத்திரிகையாளரும், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக்க இருந்தவருமான சோலை, இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்று சொல்கிறார்.

‘‘உறவை சட்டப்பூர்வமாக்கணும்னு ரொம்ப முயற்சி எடுத்தாங்க. ஆனா அது நடக்கல. எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதல்வரானதும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயலலிதா நச்சரிச்சாங்க. கல்யாணம் செய்துக்கல. எம்.ஜி.ஆர் கூடக் கொஞ்சம் அரை குறை சம்மதத்திலே இருந்தார். ஆனா, சின்னப்ப தேவர் கடுமையா எச்சரிச்சார். ‘தம்பி எத்தனைப் பெண்களை வேணும்னாலும் வச்சுக்குங்க. ஆனா இரண்டாம் கல்யாணம் செய்துக்கிற தப்பை மாத்திரம் செய்யாதீங்க. செஞ்சீங்க, இந்த ஃபீல்டை விட்டுப் போயிடுங்க’. அப்படித்தான் அப்ப கல்யாணம் நடக்காம போச்சு.

எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையா முதல் அமைச்சர் ஆனதும், 1983லே ஜெயலலிதா மூகாம்பிகையிலே திருமணம் செய்துக்கணும்னு முடிவு செஞ்சாங்க. என்னை கூப்பிட்டு, ‘அண்ணே, நாளைக்கு நாம ஒரு எடத்துக்குப் போறோம். தயார் செஞ்சுகிட்டு வாங்க’ன்னாங்க. சித்த நேரம் பொறுத்து எம்.ஜி.ஆர் என்னை கூப்பிட்டு, ‘நாளைக்கு நா ஊரிலே இருக்கமாட்டேன். அம்முவை கொஞ்சம் சமாளி. போயஸ் கார்டனுக்கு போய் அவளைக் கவனிச்சுக்க’ன்னார். என்ன விஷயம்னு கேட்டேன். ‘அப்புறமா சொல்றேன்’னார்.

நா போயஸ் கார்டனுக்குப் போனேன். ஜெயலலிதா ரொம்ப சந்தோஷமாகத் தெரிஞ்சாங்க. ‘நாம ஒருத்தருக்காகக் காத்திருக்கணும்’னாங்க. நாங்க 12 மணி வரை காத்திருந்தோம். யாரும் வரல.. மூகாம்பிகைக்குப் போயி கல்யாணம் செய்துக்கிற பிளான் இருந்திருக்கனும்னு நா யூகிச்சேன். அது எம்.ஜி.ஆரை தொந்தரவு செய்திருக்கனும். ஆனா என்.ஜி.ஆர். ஜானகியோட எங்கேயோ தொடர்பு கொள்ள முடியாது இடத்துக்குக் கிளம்பிபோயிட்டார். எம்.ஜி.ஆர் தன்னை ஏமாத்திட்டார்ன்னு ஜெயலலிதாவுக்கு புரிஞ்ச உடனே அதுக்கு வந்ததே பார்க்கனும் கோபம். கைக்குக் கிடைச்ச, எல்லாத்தையும் எடுத்து விட்டெறிஞ்சுது. சாமானையெல்லாம் எடுத்து உடைச்சுது. கன்னாபின்னான்னு கத்திச்சு. ரொம்ப நேரம் சமாதானமாகல்லே.

அப்புறமா எம்.ஜி.ஆர் எங்கிட்ட சொன்னார். ‘அம்மு கல்யாணம் செய்துக்கத் தொந்தரவு பண்ணினா. நான் சரின்னேன்’னு.

அதுதான் அவருடைய பலவீனம். தன்னுடைய முடிவுகளாலே உறுதியாக இருக்கமாட்டார். ஜெயலலிதாவுடைய உணர்வுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அவளை ஏமாத்துற நினைவோ, குத்த உணர்வோ அவருக்கு இருக்கல. பாவம் அந்த பொண்ணு’’ என்று சோலை சொன்னார்.

ஜெயலலிதா வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவமாகிப் போனது.

×Close
×Close