எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர் புலமைப்பித்தன் மரணம்

MGR’s leading poet, former ADMK leader Pulamaipithan passed away: அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவருமான கவிஞர் புலமைப்பித்தன் மரணம்

அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞருமான புலமைப்பித்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

புலவர் புலமைப்பித்தன் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை புலமைபித்தன் காலமானார். நீலாங்கரையில் உள்ள புலமைப்பித்தன் வீட்டில் இறுதி அஞ்சலி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

புலவர் புலமைப்பித்தன் கோயம்புத்தூர் மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி. இவரது பெற்றோர் கருப்பண்ணன் – தெய்வானை அம்மாள். பள்ளி இறுதி வகுப்பில் படித்து முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு 12 ஆண்டுகள் தமிழாசிரியராக நெல்லை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார்.

1964இல் திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக சென்னைக்கு வந்தார். அப்போது, சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். 1968 இல் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய ’நான் யார் நான் யார்’ என்ற பாடல் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ’ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார். பிறகு எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவை தொடங்கியபோது, ஆசிரியர் வேலையை விட்டு விட்டு அதிமுகவில் சேர்ந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 1978 ஆம் ஆண்டு, புலமைப்பித்தன் மேல் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேல் சபையின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

புலமைப்பித்தன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல், “புரட்சித்தீ”, “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” ஆகிய கவிதை புத்தகங்களையும், “எது கவிதை” என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” புத்தகம், சென்னை பல்கலைக்கழக எம்.ஏ. வகுப்புக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டு உள்ளது.

புலமைப்பித்தன் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர். மேலும் நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றவர். இவர் கடைசியாக, வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்தில் பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களை எழுதிய, புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு அரசியல் கட்சியினரும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mgrs leading poet former admk leader pulamaipithan passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com