MHC restrained prosecution of Isha foundation : சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டுமானங்களை கட்டியதாக ஈஷா அறக்கட்டளை மீது புகார்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2006 முதல் 2014ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டதாக கூறி அறக்கட்டளை மீது நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்தது. இந்த நோட்டீஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஷா அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு மத்திய அரசின் அறிவிப்பாணையை தொடர்ந்து ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது என்று தமிழக அரசு தன்னுடைய விவாதத்தில் கூறிய நிலையில் கல்வி பயன்பாட்டு கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து ஈஷா அறக்கட்டளை விலக்கு பெற்றுள்ளது என்று ஈஷா தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.
மாசு கட்டுப்பாடு வாரியம் அளித்த நோட்டீஸை எதிர்த்து ஈஷா தொடர்ந்த வழக்கில், அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil