கல்வராயன் மலைப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை சார்ந்த அமைச்சருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இன்று மீண்டும் (ஜூலை 24) வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
அப்போது பேசிய நீதிபதிகள், “கல்வராயன் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டீர்களா? அங்கு என்ன நடக்கிறது. அரசு அதிகாரிகள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று கேட்டனர்.
தொடர்ந்து, நீதிபதிகளாகிய நாங்கள் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியாது. எனவே கல்வராயன் மலைப்பகுதிக்குச் சென்று மக்களின் நிலை பற்றி தமிழக முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும்.
முதலமைச்சர் செல்ல முடியாவிட்டால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு பார்வையிட்டால் தான் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, ரேசன் கடைகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“