மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை முடிச்சூர் மற்றும் வரதராஜபுரத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளில் முடங்கி தத்தளித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய 2 நாட்களும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை புறநகர் பகுதியான முடிச்சூர் மற்றும் வரதராஜபுரத்தில் 20 செ.மீ வரை கனமழை பெய்தது. இதனால், ஏற்கெனவே, தாழ்வான பகுதியாக உள்ள முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
#SOS #Mudichur #முடிச்சூர் @OfficeOfTRBR help please https://t.co/RqD31mrdPs
— · (@Ngoalinho) December 5, 2023
முடிச்சூர் பகுதியில், எம்.ஜி.ஆர் நகர், லட்சுமி நகர், சிவவிஷ்வ நகர், வரதராஜபுரம் ராயப்ப நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் முதல் தளம் முற்றிலுமாக மழை வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாகன நிறுதுமிடமான தரைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக கார்கள் முதல் விலை உயர்ந்த கார்கள் வரை, இருசக்கர வாகனங்கள் என அனைத்துமே நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் முடிச்சூரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் மக்களை தீயனைப்பு படையினரின் ரப்பர் படகுகள் மற்றும் மீனவர்களின் ஃபைபர் படகுகள் மூலம் சென்று அவர்களை மீட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு உணவு, பால் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் சிறப்பு முகாம்களை அமைத்து மீட்கப்பட்டவர்களை அங்கே தங்க வைத்து உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர். 70 முகாம்களில் சுமார் 3,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததற்கு காரணம், கூடுவாஞ்சேரி ஏரி, படப்பை ஏரி, வஞ்சுவாஞ்சேரி ஏரி, சுங்குவார்சத்திரம் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய வெள்ள நீரே காரணம் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.