தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று (டிச.4) சென்னை வழியாக ஆந்திரா கடற்கரை சென்று நாளை (டிச.5) நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது.
தற்போது புயல் சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் புயல் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு வரை சென்னையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டகளில் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி, கல்பாக்கம், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், திருமால்பூர், வந்தவாசி இந்த பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இங்கு இன்னும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
திருத்தணி, சோலிங்கர், அரங்கோணம் இந்த பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மாநகரில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. மகாபலிபுரம், கேளம்பாக்கம், சிறுசேரி, மறைமலைநகர் அதி கனமழையும், தாம்பரம், பூந்தமல்லி, குன்றத்தூர், பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. மத்திய சென்னை பகுதிகளிலும் கன முதல் மின கனமழை பெய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“