மிக்ஜாம் புயல் கடந்த 2 நாட்களாக மணிக்கு 10-18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதன் வேகத்தை மாற்றி 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று காலை 8.30 மணி அளவில், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 290 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிசம்பர் 04) மாலை, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையொட்டிய பகுதிகளில் நிலைகொள்ளக்கூடும். அதன் பின்னர், இது வடக்கு திசையில் தெற்கு ஆந்திரக் கடற்கரைக்கு இணையாக நகர்ந்து, டிசம்பர் 5-ம் தேதி காலை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலான மழை பெய்துள்ளது. 32 இடங்களில் கனமழையும் 2 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டியில் 15 செ.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு அடுத்து வரும் 2 தினங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் இன்று (டிசம்பர் 03) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுவை, கடலூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (டிசம்பர் 4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரீரு இடங்களில் மிக கனமழையும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
பலத்த காற்றுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், இன்று (டிசம்பர் 3) திருவள்ளூ தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களின் கடற்பகுதிகளில் பலத்த தரைக் காற்றானது மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (டிசம்பர் 04) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 60 முதல் 70 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 80 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். விழுப்புரம், புதுவை, கடலூர் மாவட்டங்களில் காற்று மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில், தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். அதனால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 35 செ.மீ இந்த கால கட்டத்தில் சராசரி மழை பொழிவு அளவு 37 செ.மீ என்பதால் மழைபொழிவு அளவு 6 சதவீதம் இயல்பைவிடக் குறைவு” என்று கூறினார்.
மிக்ஜாம் புயல் நகரும் வேகம் பற்றி கூறிய பாலச்சந்திரன், “முதலில் இந்த புயல் டிசம்பர் 1, 2 தேதிகளில் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. சராசரியாக 10 கி.மீ, 18 கி.மீ வேகத்தில் கூட நகர்ந்திருக்கிறது. அதனுடைய வேகம் படிப்படியாக குறைந்து தற்போது 5 கி.மீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. மிகக் குறைவான வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதால் அதன் வெளிப்புற தாக்கத்தில் இருந்து இந்த மழை கிடைத்துள்ளது. இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும். கடற்பகுதிகளில் வெப்பம் இருக்கிறது. சாதகமான சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால் தீவிரப் புயலாக அடுத்த நிலைக்கு செல்லக்கூடும். இது கரையைக் கடக்கும்போது புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஏனென்றால், நிலப் பகுதியில் வருவதால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இது தீவிரப் புயலாக வலுப்பெறுவதற்கான காரணங்கள் சாதகமாக இருக்கின்றன. அதனால், தொடர்ந்து கண்காணிக்கப்படும்.” என்று பாலச்சந்திரன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“