Crowd Strike அப்டேட் காரணமாக மைக்ரோசாஃப்ட் இணையதளம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் இன்று 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய நேற்று (ஜூலை 19) பால்கன் சென்சாரை அப்டேட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் உலகம் முழுவதும் விமான முன்பதிவு மற்றும் போர்டிங் சேவைகள் முடங்கியது. நேற்று மட்டும் உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது, 1400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது.
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. விமான நிலையங்களில் உள்ள டிஜிட்டல் போர்டுகள் செயல்படாததால் விமான வருகை, புறப்பாடு விவரங்கள் பலகையில் எழுதிவைக்கப்பட்டன. மேலும், பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக்கொடுக்க முடியாத நிலையில், கைகளால் போர்டிங் பாஸ் எழுதிக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 2-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து இருந்து புறப்படும் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கூடுதல் ஊழியர்கள் மூலம் கைகளால் போர்டிங் பாஸ்கள் எழுதிக் கொடுக்கப்படுகின்றன. கவுண்டர்கள் முன் பயணிகள் கூடி பயணம் நேரம், ரத்து பற்றி கேட்பதால் பெருங்கூட்டம் ஏற்பட்டு உள்ளது.
இணையதள சேவை சீராக கிடைக்காமல் விட்டுவிட்டு வருவதால் இன்றும் பாதிப்புக்கப்பட்டுள்ளது என்றும் இன்று மதியதிற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மைக்ரோசாஃப்ட் பிரச்சனைக்கு தீர்வு காண விரைவாக பணியாற்றி வருகிறோம். நெருக்கடிகளுக்கு CrowdStrike மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக பணிபுரிகின்றனர். வாடிக்கையாளர்களின் கணினிகள் பாதுகாப்பாக மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யநாதெல்லா தெரிவித்துள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.