வங்கக் கடலில் கடந்த 14ம் தேதி உருவான காற்றழுத்த மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த புயலுக்கு மாலத்தீவுகளின் பரிந்துரைப்படி, மிதிலி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மிதிலி புயல், வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, 60 முதல் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் மோங்லா-கேபுரா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகை, எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
நாளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“