தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பம்புசெட் நீர் மற்றும் காவிரிநீரை கொண்டு அதிக அளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நடவு செய்தல், அறுவடை பணிகளை இயந்திரம் மூலம் விவசாயிகள் மேற்கொண்டு வந்தாலும் சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும் இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்கான பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்து நாற்றுப்பறித்து பெண் தொழிலாளர்கள் மூலம் நடவு செய்து வருகின்றனர்.
பெண் கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்றுவிடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய பணிகளின் போது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும் பயனில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/3b9a2eb2-8cf.jpg)
அந்தவகையில், மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடி, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வடமாநில ஆண் தொழிலாளர்கள் சம்பா நடவு நாற்றுப்பறித்து அவர்களே நடவு செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 5000 ரூபாய் சம்பளத்தில் 11 தொழிலாளர்கள் நாற்றுபரித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1 நாளைக்கு 3 முதல் 4 ஏக்கர் வரை நடவு பணிகளை வட மாநில தொழிலாளர்கள் திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுப்பறித்து கைநடவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவிக்கையில்; இப்போ வயல் வேலைக்கு பெண்களும் சரி, ஆண்களும் சரி சரியா வரமாட்டேன்றாங்க, பலபேரு தொழில மாத்திகிட்டு பட்டணத்துக்கு போயிட்டாங்க, அதனால விவசாயத்துல பெரிதா பலருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கு, வயல் வைத்திருந்தாலும், நெல் நட்டாலும் அதைப்பறிக்க ஆள் கிடைப்பது குதிரைக்கொம்பா இருக்குங்க.
இங்க கிராமத்தில் இருக்கின்ற பெண்கள் பெரும்பாலும் வயல் வேலைக்கு வந்தவங்க இப்போ 100 நாள் வேலைக்கு போய் சொகுசா உக்காந்துட்டு காசு வாங்கிட்டு வருவதால குனிந்து நிமிர கஷ்ட்டப்பட்டுகிட்டு வயல் வேலைக்கு வர்றதில்லைங்க. நம்ம ஆளுங்களுக்கு கூலி கொடுத்து மாளலங்க, வடநாட்டு ஆளுங்க அங்க வேலை கிடைக்காததால பல்வேறு ஏஜென்சி மூலம் இங்க வர்றாங்க, நிறைவா வேலை செய்யுறாங்க, குறைவா கூலியும் வாங்கிக்கிறாங்க. அதனால, இப்போ நாங்க வடநாட்டுக்காரவங்களத்தான் நம்பி நாத்து நடுறோம், அறுவடையும் பண்றோம்ங்க." என்று அவர் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“