கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெயில் பதிவாகி வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் மற்றும் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வெயில் தாக்கம் மற்றும் ஈரப்பதத்தின் காரணமாகதமிழகத்தின் தெற்கு, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, தஞ்சாவூர், திருப்பூர், தேனி, மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஒரு சில மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். குறிப்பாக வட தமிழகத்தில் வெப்ப நிலை தொடரக்கூடும். வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு படி, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரியும், சேலத்தில் 41.6 டிகிரியும், வேலூரில் 41.3 டிகிரியும் பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் 39 டிகிரி வெப்ப நிலை பதிவானது. இங்கு அடுத்த சில நாட்களில் 40 டிகிரி வெயில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“