ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றது இத்தனை சிக்கல்களை இழுத்து வைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. புதிதாக முளைத்திருக்கிறது பதவி விலகல் கோரிக்கை!
தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன். ஜூலை முதல் வாரம் இவர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து பின்னர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.பாலமுருகன் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானப் படைக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான செய்திகள் அப்போது பெரிதாக வெளியாகவில்லை.
இந்தச் சூழலில் ஜூலை 23-ம் தேதி மாலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு கிளம்பினார். அவருடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் என அவரது ஆதரவாளர்களும் இணைந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக.வில் தனது அணிக்கு ஆதரவாக லாபி செய்ய டெல்லி டெல்லி செல்வதாக தகவல்கள் வெளிவந்தன. ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகிய நால்வரும் நிர்மலா சீதாராமனின் இல்லத்திற்கும் கிளம்பிச் சென்றனர்.
ஆனால் அங்கு அவர்கள் சென்று திரும்பிய பிறகு, ‘மைத்ரேயனுக்கு மட்டுமே நிர்மலா சீதாராமன் அப்பாய்ன்மெண்ட் கொடுத்ததாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவில்லை’ என்றும் நிர்மலா சீதாராமனின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலமாக ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் திரும்பியது உறுதி ஆனது.
இதற்கிடையே சென்னையில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓ.பி.எஸ். சகோதரருக்கு ராணுவ ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி கூறவே ஓ.பி.எஸ் டெல்லி சென்ற’ தகவலை பேட்டியாக கூறினர். அதன்பிறகே ராணுவ ஆம்புலன்ஸை தனி நபர்களுக்கு பயன்படுத்தலாமா? என்கிற சர்ச்சை எழுந்தது. இவர்கள் இருவரின் இந்தப் பேட்டி காரணமாகவே நிர்மலா சீதாராமன் சந்திப்பை தவிர்த்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தச் சூழலில் இது தொடர்பாக இன்று (ஜூலை 25) திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு மு.க.ஸ்டாலின், ‘ஓ.பி.எஸ் தனது பேட்டியிலேயே அரசியல் ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ டெல்லி செல்லவில்லை என கூறியிருக்கிறார்.
அவரது சகோதரருக்கு, ஒரு தனிப்பட்ட நபருக்கு எப்படி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது? என்பது அதிர்ச்சியளிக்கிறது. அதை பயன்படுத்திய ஓ.பி.எஸ்.ஸும், ராணுவ விமானத்தை அனுப்பி வைத்த நிர்மலா சீதாராமனும் இதற்காக பதவி விலக வேண்டும்’ என்றார் மு.க.ஸ்டாலின்.
ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை தொடங்கியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘விரைவில் இபிஎஸ் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை தொடங்கும். அதற்காகவே ஆளுனரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
விரைவில் இந்த ஆட்சி மாற்றப்படுவது மட்டுமல்லாமல், இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பலர் ஊழலுக்காக சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்றார் ஸ்டாலின்.