பால் கலப்படம் குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகவும், என்னை மிரட்டவே இந்த வழக்கு தெடரப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாகவும், உட்கொள்ள தகுதியானது அல்ல என தனியார் பால் நிறுவனங்கள் மீது கடந்த மே மாதம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்தார்.
இந்நிலையில் ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே மாதம் பல்வேறு நாட்களில் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். மேலும் எங்கள் நிறுவன பால் பொருள்களில் கலப்படம் உள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
எனவே தங்கள் நிறுவனங்கள் குறித்து பேச ராஜேந்திர பாலாஜி பேச தடை விதிக்க வேண்டும். மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியால் தங்கள் நிறுவனத்துக்கும், நற்பெயருக்கும் கலங்கம் ஏற்பட்டது எனவே அதற்காக இழப்பை ஈடு செய்யும் வகையில் மூன்று நிறுவனங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்க ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிடவேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதாரம் இல்லாமல் பேச தடை விதித்த நீதிபதி மனு தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் பால் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையில் பால் கலப்படம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரிவித்தேன். நான் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் நான் எனது கடைமையை செய்துள்ளேன் இதற்கு சிவில் வழக்கு தொடரமுடியாது.
மேலும் என்னை மிரட்டும் விதமாக இந்த வழக்கை தனியார் பால் நிறுவனங்கள் தெடர்ந்துள்ளன. சிவில் வழக்கு தொடர்ந்த மூன்று நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருள்கள் தரம் குறைந்தவை தான். டோட்லா பால் நிறுவனத்தின் பாலில் ஹட்ரஜன் கார்பனேட் வேதிப்பொருள் கலந்துள்ளது என்று தமிழக அரசு நோட்டீஸ் அனப்பியுள்ளது. இதனை அந்த நிறுவனம் ஒத்துக்கொண்டுள்ளது. விஜய் டைரி நிறுவன பால் தரம் குறைந்தது. மேலும் எனது புகாருக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது.
எனது புகார் மூலம் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த ஆதாரங்களை அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை தொடர்ந்ததன் மூலம் இந்த நிறுவனங்கள் தங்களின் தவறை மறைக்க நினைக்கின்றது.
எனவே இந்த வழக்கை வழக்கு செலவுடன் தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு செலவை தொகையை ஏதேனும் ஒரு அறக்கட்டளைக்கு அளிக்க வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
.