கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியல் நிலையில், ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத பொருளை, தமிழக அரசு கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கும் தொகுப்பில் ஆவின் டெய்ரி ஒயிட்னரை "ஆவின் ஹெல்த் மிக்ஸ்" என்று கூறி அதனை வழங்கிட எதன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டது, இதற்கு ஊழல் நோக்கமா என்று விசாரணை நடத்த பால் முகவர்க்ள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர், சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஞாயிற்றுக்கிழமை (05.06.2022) பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ‘ஆவின்’ நிறுவனத்தின் ‘ஹெல்த் மிக்ஸ்’ பொருளை வாங்க அனுமதி வழங்காமல் தனியார் நிறுவனத்தின் ‘PRO PL’ என்கிற ‘ஹெல்த் மிக்ஸ்’ வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அரசுக்கு 48கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
அவர் அப்படி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக தகவல்களை திரட்டியபோது, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறை சார்பில் கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அப்போதைய ஆவின் பொதுமேலாளர் ராஜேந்திரன் ‘ஆவின் டெய்ரி ஒயிட்னர்’ என்கிற ஸ்கிம்டு மில்க் பவுடரை (SMP) தான் ‘ஹெல்த் மிக்ஸ்’ என பரிந்துரை செய்துள்ளது தெரிய வந்தது.
‘ஹெல்த் மிக்ஸ்’ என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக் கூடிய வகையில் பல்வேறு சத்துப் பொருட்களை உள்ளடக்கி தயாரிக்கப்படும் நியூட்ரிஸியன் பொருளாகும் என்கிற நிலையில் அது போன்ற ஒரு பொருள் ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத சூழலில் அரசு கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கும் தொகுப்பில் ஆவின் டெய்ரி ஒயிட்னரை ‘ஆவின் ஹெல்த் மிக்ஸ்’ என்று கூறி அதனை வழங்கிட எதன் அடிப்படையில் ராஜேந்திரன் பரிந்துரை செய்தார் என்பதும், ஒருவேளை அரசு வழங்கும் இந்த திட்டத்தின் பெயரால் ஆவினில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடத்த திட்டமிடப்பட்டதா..? என்பதும் தெரியவில்லை.
மேலும், பாலில் இருந்து கொழுப்பு சத்து, திட சத்துக்களை பிரித்தெடுத்த பிறகு அதனை பவுடராக்கி சிறிதளவு சர்க்கரை சேர்க்கும் போது உருமாறும் ‘டெய்ரி ஒயிட்னர்’ எனும் ஸ்கிம்டு மில்க் பவுடரைத் (SMP) தான் அரசு வழங்கும் நலத்திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது..? என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
எனவே, ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத ஒரு பொருளை அதுவும் ஒன்றுக்கொன்று மாறுபாடான தரம், குணாதிசயம் கொண்ட பொருளை அரசு கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பில் இணைத்து வழங்கிட எதற்காக பரிந்துரை செய்யப்பட்டது..? அதன் பின்னணியில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார்..? யார்..? என்பது குறித்து விரிவான உரிய விசாரணை நடத்த தமிழக முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"