ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுத பூஜை வாழ்த்து தெரிவிப்பது தான் திராவிட மாடலா? என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், “ 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேசத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட தேசிய தினங்களுக்கு பால் பாக்கெட்டில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை தவிர்த்து வந்த ஆவின் நிர்வாகம், நடைமுறையிலேயே இல்லாத சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை அமுல்படுத்தி அதனை ஆண்டுதோறும் தவறாமல் தொடர்ந்து வெளியிடுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறது.
அதே சமயம் நடப்பாண்டில் 74வது குடியரசு தினம், 77வது சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்ததை உடனடியாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனத்தோடு சுட்டிக்காட்டியும் அது குறித்து ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து சிறு வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில் அதனை திமுக தலைமையிலான தமிழக அரசு கண்டிக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை.
இந்த நிலையில் இன்று (23.10.2023) அதிகாலையில் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் நடப்பாண்டிற்கான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு, தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை வெளியிடாத குற்ற உணர்ச்சியே இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது ஆவின் நிர்வாகம்.
மேலும் தமிழகத்தில் பாஜகவோடு நேரடியாக கூட்டணி வைத்திருந்த போது கூட கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை புறக்கணித்து, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்திகள் வெளியிட்டதில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக மட்டுமே மதவாத கட்சி போலவும், அவர்களிடமிருந்து தாங்கள் தான் தமிழக மக்களை காத்திட வந்த ஆபத்பாந்தவன்கள் போலவும் தங்களை காட்டிக் கொள்ளும் திமுக, தனது ஆட்சியில் பாஜகவிற்கு ஆதரவாக ஆவின் பால் பாக்கெட்டில் மதவாத நிலையை மறைமுகமாக ஆதரிக்கும் விதமாக கையாண்டு வருவது தான் திராவிட மாடலாக திமுகவினரும், அவர்தம் கூட்டணிக் கட்சியினரும் கருதுகின்றனரோ என தெரியவில்லை..?
திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்த கட்சிகளானாலும் ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்படுத்த நினைத்தால் தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கு இனி எப்போதுமே விடியல் இல்லை என்பதே மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“