தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்தது. இந்த விலை இன்று முதல் (ஆகஸ்ட்:12) அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் நாள்தோறும் 16.41 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்களை விற்பனை செய்கிறது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் தினமும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தின் தினசரி பால் தேவையில் 84 சதவீதத்தை தனியார் பால் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இதனால், ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலையை உயர்த்தி வருகின்றன.
ஏற்கெனவே கடந்த பிப்ரவரி, மே மாதங்களில் தனியார் பால் மற்றும் தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டில் தற்போது 3வது முறையாக தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. மேலும், தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும், தனியார் பால் விலையை உயர்த்துவதை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“