தமிழகத்தில் பால் விலை உயர்வு : அரசு சொல்வது என்ன - அரசியல் கட்சி தலைவர்களின் பார்வை

Milk price hike : பால்கொள்முதல் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பால் உற்பத்தி செலவு அதிகரித்ததன் காரணமாகவே, இந்த விலையுயர்வு என்று அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பால் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, காபி மற்றும் டீக்களின் விலைகளும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.

பால் விலை உயர்வுக்கு அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை

முதல்வர் பழனிசாமி : பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், கடும் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. உற்பத்தியாளர் நலன் கருதியே பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பால்வாகன போக்குவரத்து செலவு, தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணமாக, இந்த விலையுயர்வு
பால்கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக, பால்விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால்கொள்முதல் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் பால் விலை உயர்த்தி உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன் கருத்து : பால் விலையேற்றத்தின் பலன் உற்பத்தியாளர்களிடமே சென்றடைகிறது. இதை பொருளாதார முன்னேற்ற நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். பால் விலை உயர்வில் எந்தவித அரசியலும் இல்லை, இதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பால் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள தலைவர்கள்

திமுக தலைவர் ஸ்டாலின் : பால் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது, தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : விவசாயிகள் நொடிந்து போய் இருக்கிற நேரத்தில், பசு, எருமை மாடு வைத்திருக்க விவசாயிகளுக்கு பால் உற்பத்தி விலையை உயர்த்தி தமிழக அரசு கொடுத்து இருப்பதை நான் வரவேற்கிறேன். பால் உற்பத்தியாளர்கள் கஷ்டங்களை உணர வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விற்பனை விலை அதிகமாக உயர்த்தியது சரியல்ல.

திருமாவளவன் எம்.பி : தமிழக அரசு திடீரென பால் விலையை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை எளிய மக்களின், நடுத்தர வருவாயுள்ள மக்களின், குழந்தைகளின் சத்துணவாக பால் இருக்கிறது. இந்நிலையில், குறைந்த, நடுத்தர வருவாயுள்ள குடும்பங்களுக்கு இந்த விலை ஏற்றம் என்பது பெரும் நெருக்கடியாகும். பால் விலை உயர்வுக்கு மாட்டுத்தீவனங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உட்பட பல காரணங்களை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கூறினாலும் அது ஏற்புடையதல்ல. ஏழை எளிய மக்களின், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் தமிழக அரசு உடனடியாக இந்த பால் விலை ஏற்றத்தை திரும்பப்பெற வேண்டும். அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், காப்பகங்கள் ஆகியவற்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையை விட குறைந்த விலையில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் : பால் விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. மாநில அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். மக்களிடம் கலந்து, கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும். பெரும்பான்மையான மக்கள் பாலை உபயோகிக்கின்றனர். அவர்கள் நலன் பாதிக்காத விதத்தில் அரசு முடிவு எடுக்கவேண்டும். பால்விலை உயர்வு கண்டிக்கத்தக்கது, நினைக்கும் போதெல்லாம் இதுபோல் விலை உயர்த்தக்கூடாது.

டிடிவி தினகரன் : பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எம்.பி. கனிமொழி : அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வானது மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஆளும் அதிமுக அரசு இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆனந்தன் கூறியதாவது: தற்போது பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதனால் பல டீ கடைகள் பெரிய அளவில் லாபம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த நேரத்தில் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது வியாபாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் டீ, காபி விலையையும் உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அதேநேரம் ஏற்கனவே விற்பனை மந்தமாகி விட்ட நிலையில் விலையை உயர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகுமோ என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close