தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைபால் கொள்முதல் விலை ரூ.6 உயர்ந்து ரூ.41 ஆகிறது. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 உயருகிறது. பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை உயர்வு வரும் திங்கள்கிழமை முதல்( ஆக.19 ) அமலுக்கு வருகிறது.
*பசும்பால் லிட்டருக்கு ரூ.28 லிருந்து ரூ. 32 ஆக உயருகிறது.
*எருமை பால் லிட்டருக்கு ரூ.35 லிருந்து ரூ.41 ஆக உயருகிறது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் பால் விலை உயர்த்தி உள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். இந்த பால் கொள்முதல் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் 4.60 லட்சம் பேர் பயனடைவர். என அவர் கூறினார்.
ஸ்டாலின் கண்டனம் : பால் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது, தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் பாண்டியராஜன் கருத்து : பால் விலையேற்றத்தின் பலன் உற்பத்தியாளர்களிடமே சென்றடைகிறது. இதை பொருளாதார முன்னேற்ற நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். பால் விலை உயர்வில் எந்தவித அரசியலும் இல்லை, இதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.