2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்ததை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் சிறுதானிய ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோயில், குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சிறுதானிய சமையல் போட்டி கடந்த 13-ஆம் தேதி நடத்தப்பட்டது.
இது மட்டுமின்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 39 பேர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், சிறுதானிய கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.